மண்ணெண்ணெய் ஊத்துற இடத்துல மறைச்சு வச்சிருந்த பார்சல்.. ஸ்டவ் வச்சு இப்படி ஒரு ட்ரிக்கா..! - அதிர்ச்சியில் அதிகாரிகள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை: மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மண்ணெணெய் ஸ்டவ்வில் வைத்து கடத்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்:
நேற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 110 பயணிகள் கொண்ட விமானம் புறப்படுவதாக இருந்தது சோதனைகள் முடிந்து விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த விமானத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பழைய மண்ணெணெய் ஸ்டவ்:
இதன் காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஷகில் அகமது என்ற இளைஞர் பையில் பழைய ஸ்டவ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஸ்டவ்வில், மண்ணெண்ணெய் ஊற்றும் பகுதியில் கண்ணாடியால் சுற்றப்பட்ட பார்சல் இருந்தது. அதற்குள் வெண்மை நிற பொடி போன்று இருந்தது. அது என்ன என்று ஆராய்ந்தபோது தான் விலை உயர்ந்த போதைப்பொருள் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், இதன் மதிப்பு சுமார் 2 கோடி என கூறப்படுகிறது.
தன்னுடையது இல்லை என வாக்குவாதம்:
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷகிலிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஷகில் போதைப் பொருள் இருந்த அந்த ஸ்டவ் தன்னுடையது இல்லை எனவும், விமான நிலையத்தில் நுழைந்தபோது இலங்கையில் உள்ள நண்பரிடம் வழங்கக்கோரி நபர் ஒருவர் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விமானத் துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
தீவிர விசாரணை:
இருப்பினும் ஷகிலை கைது செய்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகளில் தான் விமான சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், தங்கம், போதைப்பொருள், நட்சத்திர ஆமை உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்தும் கும்பல்களின் நடவடிக்கை குறையாமல் இருப்பதாகவும், பயணிகள் உஷாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்