‘ப்ளீஸ் இத பண்ண வேண்டாமே’..நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. வேண்டுகோள் வைத்த சென்னை குடிநீர் வாரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளது.
தமிழக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் பல்வேறு இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையின் நீர் ஆதாராங்களாக இருக்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகளில் நீர் இருப்பு குறைந்த வண்ணம் உள்ளது. இதனால் பூண்டி, மற்றும் புழல் ஏரிகளில் இருந்து சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் கூறியதாவது, பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் தேவை 830 மில்லியன் லிட்டர், ஆனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடல் நீரை குடிநீர் ஆக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், ஆள்துளை கிணறுகள் மூலமாக தற்போது நிலமை சமாளிக்கப்பட்டு வருகிறது.
இதனை சமாளிக்க பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வீடுகளில் ‘ஷவர்பாத்தில்’ குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஷவர்பாத்தால் 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. இதனை தவிர்க்க வாலியில் தண்ணீர் பிடித்து குளிக்கலாம். சிலர் சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி தினசரி தங்களது கார்களை கழுவுகின்றனர். இதனால் 50 முதல் 70 லிட்டர் வரை தண்ணீர் விணாகிறது. இதனால் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் மக்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அதற்கு பதிலாக ஈரத்துணியின் மூலம் காரை துடைக்கலாம். என்பன போன்ற பல்வேறு வேண்டுகோள்களை சென்னை குடிநீர் வாரியம் மக்கள் முன் வைத்துள்ளது.