‘முதல் தேர்தலே மாபெரும் வெற்றி’!.. அப்போ அமைச்சரவையில் உங்களுக்கு இடம் உண்டா..? செய்தியாளர்கள் கேள்விக்கு ‘உதயநிதி’ பதில்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக அமைச்சரவையில் இடம் கிடைக்கப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களை மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்துள்ளது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களையும் தாண்டி, 133 இடங்களில் திமுக மட்டும் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையும் ஆட்சி அமைக்க உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டார். தனது தாத்தாவும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் மொத்தம் 91,776 வாக்குகள் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். பாமக வேட்பாளர் கசாலி 23,643 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘இது தலைவருக்கான வெற்றி, கலைஞருக்கான வெற்றி. தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்’ எனக் கூறினார். அப்போது திமுக அமைச்சரவையில் உங்களுக்கு இடம் வழங்கப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘மே 7-ம் தேதி தெரிந்துவிடும்’ என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
மற்ற செய்திகள்