தடுப்புச் சுவரில் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே பலியான திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவன் மகன்..விசாரணையில் போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவன் மகன் புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார்.
எம்பி மகன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்யசபா எம்பியான என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ். இவர் அலுவல் ரீதியாக தனது நண்பருடன் புதுச்சேரி சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பும்போது விபத்தில் சிக்கி இருக்கிறார். புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே இவர் வரும்போது துரதிருஷ்ட வசமாக அங்கிருந்த தடுப்புக் கட்டையில் மோதி இருக்கிறது ராகேஷ் சென்ற கார்.
சிக்கிய உடல்
தடுப்பு கட்டையில் மோதியதால் கார் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே ராகேஷ் மரணம் அடைந்து இருக்கிறார். அவரது உடல் காருக்குள் சிக்கிக் கொண்டதால் ஜேசிபி இயந்திரத்தின் துணை கொண்டே அவரது உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அவரது உடல் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகேஷின் நண்பர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கீழ்புத்துபட்டு அருகே விபத்து நிகழ்ந்ததை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில் திமுக எம்பி என்.ஆர் இளங்கோவன் மகன் சாலை விபத்தில் இறந்ததை அடுத்து தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முதல்வர்,"திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
திமுக எம்பி இளங்கோவனின் மகன் சாலை விபத்தில் மரணம் அடைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்