'அன்று தனது வெற்றிக்காக போராடியவர்'... 'இன்று சபாநாயகர்'... 'அண்ணாச்சியை தெரியாதவங்க யாருமே இல்ல'... யார் இந்த அப்பாவு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவை சபாநாயகராகப் போட்டியின்றி தேர்வானார் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு.
தமிழக சட்டமன்றத்திற்கு சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அப்பாவுவின் அரசியல் வாழ்க்கை என்பது மிகவும் சுவாரசியமானது. அப்பாவுவின் ஆரம்பக் கால அரசியல் வாழ்க்கை காங்கிரஸ் கட்சியில் தான் ஆரம்பித்தது. 1996 இல் ஜி.கே. மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கியபோது அதில் இணைந்த அப்பாவு, களத்தில் இறங்கி வேலை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்.
அவரது தீவிர உழைப்பின் காரணமாக அதே ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆக தேர்வானார். இந்நிலையில் 2001இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்பாவு அதே தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், தமாகா - அதிமுக கூட்டணியிலிருந்த வேறு கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால் கடும் கோபமடைந்த அப்பாவு, சுயேச்சையாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.
கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக நின்றாலும் வெற்றி பெறும் அளவிற்குச் செல்வாக்கு மிக்கவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார் அப்பாவு. அதற்கு முக்கிய காரணம் மக்களோடு எளிமையாகப் பழகுவது, அவர்களது குறைகளைக் கனிவோடு கேட்டு அதனை நிவர்த்தி செய்வது என மக்களோடு மக்களாகவே நின்றார் அப்பாவு. அதில் முக்கியமானது தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வந்தது தான்.
ஒரு கட்டத்தில் தமாகா மீண்டும் காங்கிரஸில் இணைந்தபோதிலும், அப்பாவு அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார். ஆனால் தனது தொகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள் சிலரை அப்பாவு தீவிரமாக எதிர்த்ததால், அந்தக் கட்சியின் தலைமையுடன் அவருக்குப் பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் மக்களுக்கு எதிரான எந்த பிரச்சனை என்றாலும் தயங்காமல் குரல் கொடுத்து வந்தார் அப்பாவு. இதனால் அவர் மீது பல வழக்குகள் பாய்ந்தது.
இந்த சூழ்நிலையில் தான் அப்பாவு, 2006ஆம் ஆண்டு, திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். த.மா.காவிலிருந்து வந்தாலும் திராவிட கொள்கைகளில் உறுதியான ஈடுபாடு கொண்டு விரைவிலேயே பாரம்பரிய திமுகக்காரராகவே மாறிப் போனார் அப்பாவு. பின்னர் அதே வருடம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் களம் கண்டு வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு அப்பாவு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். பரபரப்பான வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்ப துரையிடம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக்கூறி வாக்கு எண்ணும் மையத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவுவை அங்கிருந்த காவலர்கள் வெளியேற்றினார்கள். ஆனாலும் தளராத அப்பாவு தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால், தற்போது வரை முடிவுகள் வெளியிடப்படாமலேயே உள்ளன.
மிகுந்த போராட்ட குணம் கொண்ட அப்பாவுவிற்கு மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுத்தது. கடந்த தேர்தலில் நடந்த கசப்பான அனுபவங்களை மறக்காத அப்பாவு, தீவிர களப்பணியாற்றி ராதாபுரம் தொகுதியில் வெற்றியையும் பெற்றார். இந்நிலையில் அப்பாவு நிச்சயம் அமைச்சர் ஆகிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு தற்போது சபாநாயகர் பதவி தேடி வந்துள்ளது.
புதிய சபாநாயகர் சட்டசபையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவராகவும் தமிழக முன்னேற்றத்தை மையமாக வைத்து சட்டப்பேரவையை வழிநடத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் தனது எளிமையான தோற்றத்தால் மட்டும் இல்லாமல், மக்களோடு மக்களாக நின்று களப்பணியாற்றிய அப்பாவுவை, அட அண்ணாச்சியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க என ராதாபுரம் தொகுதி மக்கள் அன்போடு கூறுகிறார்கள். அப்படி என்றால் இனிமேல் சட்டசபையில் நெல்லை தமிழின் மணம் வீசும் என எதிர்பார்க்கலாம்.
எந்த சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்று சர்வாதிகாரச் சக்திகள் சதிசெய்ததோ இன்று அதே சட்டமன்றத்திற்கு சபாநாயகராகியிருக்கிறார் அப்பாவு அவர்கள். @AppavuDmk #DMK4TN 🤙❤🖤 pic.twitter.com/EDGYYOKdvJ
— Dr.R.Manikandan(இரா.மணிகண்டன்) (@Manikandanraj92) May 10, 2021
மற்ற செய்திகள்