அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தவர்களில் எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம்..? வெளியான விவரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவில் இருந்து விலகி திமுக கட்சியில் இணைந்து தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்தவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (07.05.20201) தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதில், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் முதலில் அதிமுக கட்சியில் இருந்து பின்னர் திமுகவில் இணைந்த 8 பேர், தற்போதைய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
1. எ.வ.வேலு, அதிமுகவின் தொடக்க காலம் முதல் அக்கட்சியில் இருந்தார். பின்னர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் இணைந்தார். இதனை அடுத்து திமுகவில் சேர்ந்தார். இந்த நிலையில் தற்போதைய திமுக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவியேற்றுள்ளார்.
2. அதேபோல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன். எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதா அணியில் இருந்த அவர், கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 1999-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இவர் தற்போது வருவாய்த்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
3. ஜெயலலிதா முதன்முதலாக முதல்வரானபோது, அவரது அமைச்சரவையில் எஸ்.ரகுபதி இடம்பெற்றிருந்தார். பின்னர் 2000-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் எம்.எல்.ஏ, மத்திய இணை அமைச்சர் என உயர்ந்தார். தற்போது இவர் திமுக தலைமையிலான அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
4. அதிமுக முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2009-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அவரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் திமுகவில் இணைந்தார். தற்போது திருச்செந்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
5. எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மூத்த அமைச்சராக இருந்தவர் சு.முத்துசாமி. இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து முத்துச்சாமி நீக்கப்பட்டார். இதன்பின்னர் அவர் திமுகவில் இணைந்தார். தற்போது அவர் வீட்டுவசதி துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
6. அதிமுகவின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர் சேகர்பாபு. பொது இடங்களில் ஜெயலலிதா இவரை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். இந்த நிலையில் தலைமையோடு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவர் திமுகவில் இணைந்தார். இவர் தற்போது இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
7. அதேபோல் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார். அரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த இவர், அரசு கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் திமுகவில் இணைந்து அதே தொகுதில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது கரூர் மாவட்ட எம்எல்ஏவாக இருக்கும் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
8. நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், கடந்த 2020-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து திமகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதில் போட்டியிட்டு வென்ற இவர், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதிவேற்றுள்ளார்.
மற்ற செய்திகள்