‘உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள்’!.. எம்ஜிஆர் சொன்ன ஒரு அறிவுரை.. பழைய போட்டோவை காட்டி நினைவு கூர்ந்த ஸ்டாலின்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்தல் பிரச்சாரத்தின்போது எம்ஜிஆர் உடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி பழைய சம்பவம் ஒன்றை ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
திருவள்ளூர், பூந்தமல்லி நசரத்பேட்டையில் நேற்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘நேற்று நான் இந்தியா டுடே-வுக்கு ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது என்னை பேட்டி எடுக்க வந்த ஒரு பெண் நிருபர் என்னிடம், எம்ஜிஆரும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி, இதன் பின்னணி என்ன? ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்.
அப்போது நான், நன்றாக நினைவிருக்கிறது. 1971-ம் ஆண்டு அண்ணா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அந்த தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்றோம். இதுவரை தமிழ்நாட்டில் யாரும் பெற முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி திமுக தான். கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த தேர்தலுக்கு நான் பிரச்சார நாடகம் நடத்தினேன். “முரசே முழங்கு” என்ற பிரச்சார நாடகத்தில் எனக்கு கலைஞர் வேடம். அதுதான் அந்தப் புகைப்படம்.
அந்த தேர்தலுக்குப் பிறகு வெற்றி விழா நடத்த முடிவு செய்து, அதற்காக தலைவரிடமும், எம்ஜிஆரிடமும் தேதி வாங்கினேன். அந்த விழாவிற்கு “வெற்றி விழா” என்று நான் தலைப்பிட்டேன். அதற்கு கலைஞர் ‘நிறைவு விழா’ என்று போடச் சொன்னார். ஏனென்றால், நான்தான் ஒழுங்காக படிக்காமல் விட்டு விட்டேன். நீயாவது கொஞ்சம் படிக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை சொல்லி அவ்வாறு செய்தார்.
அப்போது எம்ஜிஆர் பேசிய போது, “நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள். ஒழுங்காக படித்து, இப்போது எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வமாக இருக்கிறாயோ அதே அளவிற்கு இனிமேலும் இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார். இப்போது எம்ஜிஆரை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். இவர் எம்ஜிஆர் முகத்தையாவது பார்த்திருப்பாரா?’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மற்ற செய்திகள்