கையசைத்து புத்தாண்டு வாழ்த்து சொல்லிய கேப்டன் விஜயகாந்த்.. நெகிழ்ந்துபோன தொண்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களை சந்தித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் இவருடைய தேமுதிக, தமிழக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார். அதன்பிறகு முக்கிய நிகழ்வுகளில் மட்டும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
அந்த வகையில், புத்தாண்டு தினமான இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த். அலுவலகத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், பின்னர் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர். அதன் பிறகு, அவரை உள்ளே அழைத்துச் சென்றார் அவரது மகன். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த். அதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் இருந்த நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொண்டர்களை அவர் சந்தித்தது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
முன்னதாக, நடிகர் சத்யராஜ், தியாகு உள்ளிட்டோர் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தனர். விஜயகாந்திற்கு பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்துக்களை சத்யராஜ் தெரிவிக்க, இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனிருந்தனர்.
மற்ற செய்திகள்