சென்னை மேக வெடிப்பு.. வெறும் 3 கிமீ உயரத்தில் இருந்த மழை மேகங்கள்.. வானிலை மையம் சொன்ன ஆச்சர்ய உண்மை
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்றைய தினம் (30-12-2021) எதிர்பாராத விதமாக பெய்த திடீர் கனமழையால் சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மிதந்தன.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இது குறித்து எந்த முன்னறிவிப்பு தகவலையும் வெளியிடாதது மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை உண்டாக்கியது.
முன்னறிவிப்பு வெளியிடப்படாதது:
சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாக கேள்விகளை சாரமாரியாக எழுப்பினர். இந்த நிலையில், கனமழை தொடர்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படாதது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறும்போது, "வட தமிழகம் அருகே வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. அது தமிழக கரையை நெருங்கும் வேகம் காலை 5.30 மணி வரைyilumb மிகக் குறைவாகவே இருந்தது. அதனால், 31-ம் தேதி அதிகாலை மழை பெய்யும் என கணிக்கப்பட்டது.
வானிலையில் மாற்றம்:
ஆனால், ஒருசில மணி நேரங்களில் வானிலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வளிமண்டல சுழற்சி சென்னையை நெருங்கியது. அதன் காரணமாக, கடலோரப் பகுதியில் உள்ள இடங்களில் சில மணி நேரத்தில் மழை கொட்டி தீர்த்துவிட்டது.
இந்த மழை மேகங்கள் அதிக உயரத்திலும் இல்லை. சுமார் 3 கி.மீ. உயரத்தில் தான் இருந்தன. இதுபோன்ற வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம் ஆகும். இன்றும் சென்னையில் மழை பெய்ய நிறையவே வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
பேய் மழை:
நேற்று மாலை வரை சுமாராக பெய்த மழை, 3 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பேய் மழையாக வெளுத்து வாங்கியது.
மாலை 4 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ., எம்ஆர்சி நகரில் 9 செ.மீ, மழை பெய்திருந்தது. 6.30 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெறும் இரண்டரை மணி நேரத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் 11 செ.மீ., எம்ஆர்சி நகரில் 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரவு 8.30 மணி நிலவரப்படி எம்ஆர்சி நகரில் 20 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
திடீர் என்றுப் பெய்த மழையினால் மக்கள் சிரமத்துக்கு ஆளாயினர். வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வீடு வந்து சேருவது பெரும் போராட்டமாக மாறியது.
மற்ற செய்திகள்