‘1100-க்கு டயல் செய்தால் போதும்’.. பொதுமக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு.. அசத்தல் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுமக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 1100 தொலைபேசி சேவை திட்டத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை தலைமை செயலகத்தில் பொதுமக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 1100 தொலைபேசி சேவை திட்டத்தை இன்று (13.02.2021) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவித்து விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
முதல்வர் பழனிசாமி கடந்த 15.9.2020 அன்று சட்டப்பேரவை விதி எண்110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் தற்போது வெவ்வேறு அரசுத்துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறை வாரியான மக்கள் குறை தீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.
மாவட்ட அளவில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், அம்மா திட்ட குறை தீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அரசு அளவில் முதல்வரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.
இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே தமிழ்நாடு அரசுத்துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.
எனவே பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து அவற்றிற்கு தீர்வு காண ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து 1100 தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று 1100 தொலைபேசி சேவை திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சேவை மையத்தில் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டு குறை தீர்க்கப்படும்.
புகார் தெரிவித்தவருக்கு குறுஞ்செய்தி வாயிலாக மனுதார்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர், அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்