தடைபட்ட சப் இன்ஸ்பெக்டரின் மகள் நிச்சயதார்த்தம்.. மனம் வருந்தி DGP சைலேந்திர பாபு எழுதிய உருக்கமான கடிதம்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு காவல் உதவி ஆய்வாளருக்கு விடுமுறை மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நிலையில், இந்த கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தடைபட்ட திருமண நிச்சயதார்த்தம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சந்தான ராஜ். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்காக, விடுமுறை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் உதவி ஆய்வாளர் சந்தான ராஜ். ஆனால், உயர் அதிகாரிகள் விடுமுறை விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவரால் தனது மகளுடைய நிச்சயதார்த்ததை நடத்த முடியாமல் போனது.
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விடுமுறை கிடைக்காததால் மகளுடைய நிச்சயம் தடைபட்டதை அறிந்து மனம் வருந்துவதாகவும், இதுபோன்ற குடும்ப விழாக்களில் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்க அனுமதி மறுக்கக்கூடாது என உயர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாகவும் எதிர்காலத்தில் நிச்சியதார்த்த நிகழ்ச்சி நடத்த போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதம்
அந்த கடிதத்தில்,"தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொலி வாயிலாக கண்டறிய நேர்ந்தது. தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைகிறேன். இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகளுக்கு விடுப்பு மறுக்க கூடாது என்பதை மேல் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தங்களது மகளின் நிச்சியதார்த்த நிகழ்ச்சி நடத்த போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்" என சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்