‘பொது மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி மறுப்பு’.. கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரித்த அவலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே பொது மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருங்கலம் தாலுகாவில் உள்ள பேரையூர் அருகே பி.சுப்புலாபுரம் பகுதியில் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்தில் பட்டியலின மக்களின் சடலத்தை எரிக்க அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அம்மக்கள் வெட்டவெளியில் சடலத்தை எரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இதனால் பொது மயானத்தில் உடலை தகனம் செய்ய அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி வழங்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மழை பெய்ததால் இறந்தவரின் உடலை தார்ப்பாய் வைத்து மூடி வைத்துள்ளனர். ஆனால் இறந்தவரின் உடல் மழையில் நனைந்ததால் வெட்ட வெளியில் கொட்டும் மழையில் பெட்ரோல் ஊற்றி வேதனையுடன் கண்ணீர் மல்க எரித்துள்ளனர்.
இதனை அடுத்து தனி மயானம் இல்லாமல் சிரமப்படுவதாகவும், அதனால் தனி மயானம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல் வேலூர் அருகே சில தினங்களுக்கு முன்பு மயானத்துக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சடலத்தை பாலத்தில் இருந்து கயிறு கட்டி எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.