'வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் பிரசவம்?'... 'குழந்தைக்கு நேர்ந்த சோக சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததால், குழந்தையின் நிலை மோசமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் பிரசவம்?'... 'குழந்தைக்கு நேர்ந்த சோக சம்பவம்'!

கோவை ரத்தினபுரி அருகே வசித்து வருபவர் ரங்கராஜ். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யா கருத்தரித்த நிலையில், புலியகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக நித்யாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு கடந்த 3-ம் தேதி நித்யாவுக்கு பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கும் பொழுது, மருத்துவர் இன்றி உரிய பயிற்சியில்லாத உதவி மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சிகிச்சையின்போது உதவி மருத்துவர்கள், முதன்மை மருத்துவருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல்களையும், புகைப்படங்களை அனுப்பி சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. இதனிடையே, நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த குழந்தை அங்குள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்போது குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததை அடுத்து, தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். வாட்ஸ் அப் பிரசவம் குறித்து  மருத்துவரிடம் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி உரிய முறையில் பிரியாததால் தான், குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ALLEGED, PREGNANTWOMAN, COIMBATORE, INFANT