‘லண்டன் பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்’.. தமிழ் முறைப்படி தாலி கட்டி கல்யாணம்.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடல் கடந்து காதலித்து லண்டன் பெண்ணை கடலூர் இளைஞர் கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மகன் ரஞ்சித். என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த அன்னாலுய்சா என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
அப்போது ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளைடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதனால் காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு இருவரின் பெற்றோரும் இவர்களது திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினர். இதனை அடுத்து நேற்று கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக அன்னாலுய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார். அதேபோல் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ரஞ்சித் மணமேடையில் அமர்ந்திருந்தார். இதனை அடுத்து மங்கள வாத்தியம் இசைக்க மணமகன் ரஞ்சித், அன்னாலுய்சாவின் கழுத்தில் தாலி கட்டினார். கடல் கடந்து காதலித்து கரம்பிடித்த இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்