'என்ன நியாபகம் வச்சு இர்பான் பதான் பணம் அனுப்பிருக்கார்...' 'கண்டிப்பா இந்த காசை திருப்பி கொடுப்பேன்...' நெகிழ்ச்சியடையும் செருப்பு தைக்கும் தொழிலாளி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் ரூ. 25,000 அவரது வங்கி கணக்கில் போட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த செருப்பு தைக்கும் வியாபாரியான பாஸ்கரன் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் தவறாமல் பார்த்தவர் என்றே சொல்ல வேண்டும். ஏன்னென்றால் கிரிக்கெட் வீரர்களின் செருப்பில் ஏற்படும் சின்ன சின்ன குறைபாடுகளை உடனடியாக நீக்கும் வேலையை செய்து வருகிறார்.
சாதாரண நாளில் ரூ. 500 ஐ.பி.எல் நடைபெறும் காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை சம்பாதித்து வருவார்.
ஐ.பி.எல் போட்டி சென்னையில் நடைபெறும் போது பாஸ்கரன்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அஃபிசியல் காப்லர். இவருக்கென்று தனியே ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். பாஸ்கரன் சென்னை அணி வீரர்களின் காலணிகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலில் சரிவர வருமானம் இல்லை, ஐ.பி.எல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள பாஸ்கரனை மறக்காத இர்பான் பதான் அவருக்கு உதவி கரம் நீட்டியுள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 2015- ம் ஆண்டு ஒரே ஒரு சீசனில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இர்பான் பதான் விளையாடினார். இருந்தாலும் செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல் நினைவு வைத்து அவரை அணுகி ரூ.25,000 கொடுத்து உதவியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இர்பான் பதானுக்கு திடீரென்று பாஸ்கரனின் எண்ணம் வர, உடனடியாக ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ ரேணுக் கபூரிடத்தில் பாஸ்கரனின் செல்போன் எண்ணை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், நம்பர் வாங்கிக் கொடுக்க ரேணுக் கபூரோ மறந்து விட்டார்.
சென்னையில் இருக்கும் மற்றொருவர் மூலம் பாஸ்கரனின் நம்பர் வாங்கிய இர்பான் பதான் அவரிடம் பேசியுள்ளார். தொழில் எப்படி போகுது என்று கேட்ட இர்பான் பதான், தற்போது நாள் ஒன்றுக்கு வெறும் ரூ. 150 மட்டுமே வருமானமாக கிடைக்கிறது என்று பாஸ்கரன் கூறியிருக்கிறார். பாஸ்கரனின் நிலையை உணர்ந்த இர்பான் உடனடியாக அவரின் வங்கிக்கணக்கில் ரூ. 25,000 பதான் செலுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் வெளியே தெரிய வர, இதுகுறித்து கூறிய பாஸ்கரன், 'இக்கட்டான சூழலில் எப்படி என் குடும்பத்தை நடத்த போகிறேன் என்று கவலைப்பட்ட சூழலில் தான் என்னை இர்பான் பதான் தொடர்பு கொண்டு பணம் அளித்தார். இந்த பணத்தை நான் கண்டிப்பாக ஒரு நாள் திருப்பி கொடுத்து விடுவேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு தொடங்கினால் எனக்கு பழையபடி வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும்' என நம்பிக்கையோடு கூறுகிறார் பாஸ்கரன்.
மற்ற செய்திகள்