'நம்ம சென்னைக்கு என்ன ஆச்சு'... 'எகிறிக்கொண்டே போகும் எண்ணிக்கை'... அதிர்ச்சி அளிக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வது, மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டமும் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தலைநகரான சென்னை குறித்த தகவல் மக்களைப் பீதி அடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 161 பேரில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த 6 நாட்களில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதோடு நோய்த் தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது சென்னை மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாவட்டங்கள் எல்லாம் கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வது, மக்களின் அச்சத்திற்கு பெரும் காரணமாக உள்ளது.
இதற்கிடையே சென்னையில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறியதே முக்கிய காரணமாகும். காய்கறி சந்தை போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் மக்கள் கூடியது போன்ற காரணங்கள் அதிகமாக முன் வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தீவிரமாகக் கூறி வரும் நிலையில், மக்களும் அதனைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். ஆனால் அதைத் தவறும் பட்சத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறினால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது நிச்சயம் நாம் எதிர்பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.