'கொரோனா குறைஞ்சு போச்சுன்னு அசால்ட்டா இருக்காதீங்க'... 'தமிழகம் என்ன நிலையில் இருக்கு'?... சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மராட்டியம், கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரைப் பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முறையாகப் பின்பற்றாவிட்டால் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 140-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கூட எங்கிருந்து இந்த பாதிப்பு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து அங்குப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே இங்கிலாந்திலிருந்து வந்தவர்களில் இதுவரை 36 பயணிகளுக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 20 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையிலிருந்து வருகிறார்.
தடுப்பூசிகள் பாதுகாப்பானது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் 100 பேருக்குப் பரிசோதனை மேற்கொண்டால் அதில் 0.9 சதவீதம் பேருக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பு இருக்கும் நிலை இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்பு முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்