‘வளர்ந்த’ நாடுகளே தடுமாறும்போது... ஷாப்பிங் ‘மால்’ பற்றிய கேள்விக்கெல்லாம் ‘நேரம்’ இல்லை... நீங்கள் செய்ய வேண்டியது ‘இது’ ஒன்றுதான்... அமைச்சர் ‘அதிரடி’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலை குறித்து பிகைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலை குறித்துப் பேசியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “இந்த நோய் தாக்குதல் குறித்த அச்ச உணர்வு, முன்னெச்சரிக்கை உணர்வு என்பது மக்களுக்கு அவசியானது, அத்தியாவசியமானது, அவசரமானது. வளர்ந்த நாடுகளையே புரட்டிப்போட்டுள்ள இந்த நோயால் ஒரே நாளில் 500 பேர் உயிரிழப்பது என்பதெல்லாம் மிகவும் அதிர்ச்சியைத் தரக்கூடிய விஷயம். அந்த நிலை தற்போது இந்தியாவிலேயோ, தமிழகத்திலேயோ இல்லை என்றாலும், அது வந்துவிடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களே. அதனால் இங்கு இன்னும் சமூகப் பரவல் (Social Spread) என்பது இல்லை. அந்த சமூகப் பரவலை வரவிடாமல் தவிர்க்கவே நாங்கள் இவ்வளவு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நான் சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தும்போது மக்கள் இன்னமும் சாரைசாரையாக பயணிப்பதைப் பார்ப்பது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது.
அதனால் தேவையற்ற பயணங்கள் மற்றும் பொது இடங்களில் கூடுவதை தவிருங்கள். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருங்கள். அதை செய்யத் தவறினால் இது நமக்கு மிகப்பெரிய சவாலாகிவிடும். அரசு தேவையான எல்லா நடவடிக்கைகைளையும் உச்சபட்சமாக எடுத்தாலும்கூட, அரசு செய்கிறது என மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அரசு உத்தரவு போடவே தேவையின்றி ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து நம் உடல்நலத்திற்காகவே இதை செய்கிறோம் என உணர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை முறையாகச் செய்து முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலே போதும்.
அரசாங்கம் உங்களுக்காக உழைப்பதற்கு தயாராக உள்ளது. தற்போது நாம் இருக்கும் நிலைக்கு அடுத்த கட்டத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான மருத்துவ வசதிகளை நாங்கள் தயார் நிலையிலேயே வைத்துள்ளோம். அதனால் இந்த ஆபத்தான சூழலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பலரும் சந்தையை தடை செய்வது, ஷாப்பிங் மால்கள் மூடப்படுவது குறித்தெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் தற்போது அதையெல்லாம் பேசவே நேரமில்லை. யூடியூபில் இத்தாலி, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிலைகளைப் பாருங்கள். அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.