அப்பாடா! 8 நாட்களுக்கு பின் 'தமிழகத்துக்கு' கிடைத்த நற்செய்தி... இப்போ தான் கொஞ்சம் 'நிம்மதியா' இருக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை ஆட்டிப்படைத்த கொரோனா தற்போது கட்டுக்குள் வரத்தொடங்கி இருக்கிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 நாடுகளில் ரஷ்யாவை முந்தி இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. எனினும் கொரோனா இறப்புகள் குறைவு மற்றும் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆகியவை மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் நிலை தற்போது ஆறுதல் அளித்துள்ளது. அதாவது கடந்த 8 நாட்களுக்கு பின் நேற்று கொரோனா தொற்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 28-ம் தேதி அன்று நிலவரப்படி 3,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.
4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் 8 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு இறங்குமுகத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 33 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 15 பேர் என மொத்தம் 61 பேர் நேற்று உயிரிழந்தனர். 11 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 30 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருவண்ணாமலை, காஞ்சீபுரத்தில் தலா 3 பேரும், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடியில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கொரோனா உயிரிழப்பு 1,571 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 793 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46 ஆயிரத்து 833 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுள்ளனர். இந்த பட்டியலில் சென்னையில் 1,747 பேரும், மதுரையில் 245 பேரும், செங்கல்பட்டில் 213 பேரும், காஞ்சீபுரத்தில் 182 பேரும், திருவள்ளூரில் 175 பேரும், தேனியில் 119 பேரும், தூத்துக்குடியில் 109 பேரும், விருதுநகரில் 86 பேரும், நெல்லையில் 84 பேரும், கன்னியாகுமரியில் 78 பேரும், ராமநாதபுரத்தில் 69 பேரும், கோவையில் 60 பேரும், விழுப்புரத்தில் 58 பேரும், சிவகங்கையில் 51 பேரும், வேலூரில் 49 பேரும், ராணிப்பேட்டையில் 45 பேரும், கள்ளக்குறிச்சியில் 41 பேரும், ஈரோடு, சேலத்தில் தலா 40 பேரும், திருவண்ணாமலையில் 37 பேரும், திருச்சியில் 32 பேரும், நாகப்பட்டினத்தில் 30 பேரும், நீலகிரியில் 26 பேரும், புதுக்கோட்டையில் 25 பேரும், திண்டுக்கலில் 24 பேரும், திருப்பத்தூரில் 22 பேரும், கடலூரில் 21 பேரும், தென்காசியில் 20 பேரும், திருப்பூரில் 16 பேரும், கிருஷ்ணகிரியில் 15 பேரும், திருவாரூரில் 14 பேரும், தர்மபுரியில் 12 பேரும், அரியலூர், தஞ்சாவூரில் தலா 7 பேரும், கரூர், நாமக்கல்லில் தலா 4 பேரும், பெரம்பலூரில் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்