சென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் 9 பகுதிகளை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வெகு வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 67 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
சென்னையை பொறுத்தவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் சிறப்பு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்காகச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 13,323 சிறப்பு வார்டுகளும் 3018 வென்டிலேட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு வார்டுகளில் 295 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையின் 9 இடங்களில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளை கண்காணிப்பு வளையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' சென்னை, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இதுவரை சுமார் 25,000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடியிருந்த 9 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல விருகம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
மேலும் போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளிலும் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்கள் குடியிருந்த பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சென்னையை பொறுத்தவரை அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் பகுதிகள் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கண்காணிக்கப்பட்டு வருவதோடு 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பு வளைத்தில் இருந்து வருகிறது,'' என தெரிவித்து இருக்கிறார்.