சென்னை 'தனியார் தெலைக்காட்சியில்' '92 பேருக்கு சோதனை...' '26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...' 'அச்சத்தில் பத்திரிகையாளர்கள்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தில், மற்ற ஊழியர்கள் 92 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலருக்கு சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை பத்திரிகையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் இதுவரை தமிழகத்தில் 1,520 பேர் பாதிக்கப்பட்டு 17 பேர் பலியாகி உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 250 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ராயபுரம் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒருவருக்கும், மற்றொரு நாளிதழில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிருபர் ஒருவர் தங்கி இருந்த விடுதிக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இருவரும் தங்கி இருந்த இடம் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டுபிடித்து சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றுவோர் 92 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.