பிள்ளைங்க ‘சென்னையில’ தவிச்சிட்டு இருப்பாங்க.. ‘போலீசார் செய்த உதவி’.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உள்ள தங்களது குழந்தைகளை காண நடைபயணமாக சென்ற நரிக்குறவர்களுக்கு போலீசார் உதவி செய்து லாரியில் அனுப்பி வைத்தனர்.
சென்னையை பூர்விகமாக கொண்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் பிழைப்பு தேடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். அங்கு பாசி, ஊசி மணி, தேன் போன்ற பொருட்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர், இந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சென்னை செல்ல முடியாமல் தவித்துள்ளனர். ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் சென்னையில் தவித்து வரும் தங்களது பிள்ளைகளை காண வேண்டும் என்ற உந்துதலில், கையில் பணமில்லாமல், பசியுடன் திருவாரூரில் இருந்த சென்னைக்கு நடக்க ஆரம்பித்துள்ளனர். இரவு நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்துக்கு வந்த அவர்களை போலீசார் தடுத்து விசாரித்துள்ளனர். அப்போது பிள்ளைகளை காண நடைபயணமாகவே சென்னைக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவர்களுக்கு பிஸ்கட், பால் உள்ளிட்ட பொருட்களை கொடுத்த சாப்பிட வைத்துள்ளனர். பின்னர் அந்த வழியாக சென்னைக்கு சென்ற லாரியை நிறுத்தி அவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் இந்த மனிதாபிமான செயலை கண்ட அவர்கள் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு தங்களது நன்றியை தெரிவித்தனர்.