'பங்கு இதுக்க மேல பொறுக்க முடியாது'... 'கோதாவில் குதித்த இளைஞர்'... கல்யாணம் முடிஞ்சும் அவரவர் வீட்டுக்குப் போன தம்பதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக, கேரள எல்லையில் மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டிய சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது . அதே நேரத்தில் திருமணம் முடிந்தும் தம்பதியர் அவரவர் வீட்டிற்கே திரும்பிச் சென்றார்கள்.

'பங்கு இதுக்க மேல பொறுக்க முடியாது'... 'கோதாவில் குதித்த இளைஞர்'... கல்யாணம் முடிஞ்சும் அவரவர் வீட்டுக்குப் போன தம்பதி!

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணத்தை இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு வாளார்டி என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடந்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மணமகன் ஆன்லைன் மூலம் கேரளா செல்ல விண்ணப்பித்தார். திருமண நாள் நெருங்கிய நிலையில், நேற்று வரை அவருக்கு இ.பாஸ் அனுமதி கிடைக்கவில்லை. இந்த தகவல் மணமகள் குடும்பத்திற்கும்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுமாப்பிள்ளை பிரசாந்த் பட்டு வேஷ்டி கட்டி, இன்று காலை தமிழக கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடிக்கு வந்தார். அதேபோன்று மணமகள் காயத்ரி திருமண உடையணிந்து சோதனைசாவடிக்கு வந்தார். இதனைப் பார்த்த இரு மாநில காவல்துறையினர் இருவரிடமும் விசாரித்தனர்.

அப்போது விவரத்தைக் கூறிய மணமக்கள் குடும்பத்தினர் மாரியம்மன் கோயில் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் இ.பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது எனக் கேரள போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவர்கள் தவித்த நிலையில், குமுளி இன்ஸ்பெக்டர் யோசனை ஒன்றைக் கூறினார். அதன்படி முகூர்த்த நேரத்திற்குள் சோதனைச்சாவடி அருகே திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து மணமகன் பிரசாந்த், மணமகள் காயத்ரிக்குச் சோதனை சாவடியில் வைத்து தாலி கட்டினார். பின்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் வருவாய்த்துறையினர், மற்றும் சுகாதாரத்துறையினர் புதுமண தம்பதியரை வாழ்த்தினார்கள். ஆனால் இருவருக்கும் இ-பாஸ் இல்லாத காரணத்தால், திருமணம் நடந்த சந்தோசம் இருந்த நிலையிலும், மணமக்கள் இருவரும் வருத்தத்தோடு அவரவர் வீட்டிற்கே திரும்பிச் சென்றார்கள்.

மற்ற செய்திகள்