பொங்கல் விடுமுறைக்கு பின் 10 - 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துபடியும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துள்ள நிலையில், மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகள் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மாணவர்களுக்கு முறையாக பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக்கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, 'கொரோனா முதல் மற்றும் 2-ம் அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனாவின் 3-வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.
இதனால் மாணவர்கள் எளிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி, மெட்ரிகுலேசன்
மாநில பாடத்திட்டத்தின் கீழான பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துு ஆன்லைன் வழியாக மட்டுமே
வகுப்புகள் நடத்த வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், '3-வது அலை அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்" என்று தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கினர்.
10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்ப நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பொங்கல் விடுமுறை கழித்து 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது. அதன் மூலம்தான் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் பாமகவின் நிலைக்கு வலுசேர்த்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்