'கொரோனா கையை மீறி சென்று விட்டது'... 'உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு தகவல்'... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா 2-வது அலை கைமீறிச் சென்றுவிட்டது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், கடந்த ஆண்டைவிட மோசமாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார். அப்போது பேசிய அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கச் சுகாதாரத் துறைச் செயலாளர்தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச் சொல்வதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இன்றே சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தலைமை நீதிபதியை இன்று அவரது இல்லத்தில் சுகாதாரத் துறைச் செயலர் சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் இனி வரும் நாட்களில் அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாகத் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
மற்ற செய்திகள்