‘கார் மோதி நொடியில்’... ‘கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்’... 'பதறவைத்த சிசிடிவி காட்சிகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரி மாணவி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது, மாவட்ட ஆட்சியர் கார் மோதியதாகக் கூறப்படும் விபத்தில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளநிலையில், அந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர் துறைமங்கலம் நடுத் தெருவைச் சேர்ந்தவர்கள் துரைராஜ்-அலமேலு தம்பதியர். இவர்களின் மகள் கீர்த்தனா (21), சிறுவாச்சூரில் உள்ள, தனியார் கல்லூரியில் பி.எட்., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று, தங்களது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார் கீர்த்தனா. துறைமங்கலம் 3 சாலை பாலம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த கீர்த்தனா, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார் அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டது என்றும், அந்த காரை ஆட்சியர் ரத்னா தனது குடும்பத்தின் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும், திருச்சி சென்று கலெக்டரின் பெற்றோரை, காரில் அழைத்து வரும்போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுனர் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.