'இம்புட்டு கேக் வெட்டுனத்துக்கு போய் புடிச்சுட்டாங்க.. நான்லாம் ஆளையே'.. தற்பெருமை பேசி சிக்கிய ரவுடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வதைப் போல், வடிவேலு ஒரு தமிழ்ப்பட நகைச்சுவைக் காட்சியில், ‘நாங்களாம் யார் தெரியும்ல’ என்று தொடங்கி பெரிய பில்டப் கொடுத்திருப்பார். கடைசியில் அவர் பேசிக் கொண்டிருந்தது ஒரு உளவுத் துறை அதிகாரி என்று தெரிந்ததும், தான் ஒரு பேச்சுச் சுவைக்காக அள்ளிவிட்டதாக, அலறிக்கொண்டே கூறுவார்.
அப்படித்தான், கோவை சரணவம் பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் தனது நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது அரிவாள், பட்டாக் கத்திகளுடன் போஸ் கொடுத்தார். இந்த படம் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து சுந்தர்ராஜனை அவரது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இருக்கும்போது, ‘நானெல்லாம் கொலையே செஞ்சிருக்கேன்.. கேக் வெட்டுனத்துக்கு மாட்டிக்கிட்டேன்.. என்ன செய்ய?’ என்று தன் நண்பர் முத்துவேலிடம் தற்பெருமை பேசியிருக்கிறார். இந்த விஷயம் போலீஸார் காதை எட்டியது. அவ்வளவுதான், உடனே சுந்தர்ராஜன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை கந்தேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை சுந்தர்ராஜனும் அவரது நண்பர் முத்துவேலுவும் 6 மாதங்களுக்கு முன்பு கொன்று மண்ணில் புதைத்த சம்பவம் விசாரணையில் வெளிவந்தது.
இதனையடுத்து, முத்துவேலின் பிரேதம் புதைக்கப்பட்ட இடத்திற்கே சுந்தர்ராஜனை அழைத்துச் சென்ற போலீஸார் சடலத்தைத் தோண்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரிடியம் மோசடி, திருட்டு உள்ளிட்டவற்றை செய்துவந்த மாரிமுத்துவை அவரது நண்பர்களான சுந்தர்ராஜனும், முத்துவேலும் தகராறு ஒன்றின்போது கொன்றுள்ளனர்.