‘இந்த மாதிரி நேரத்துல நாமதான் அதுங்கள பாத்துக்கணும்’.. கோவை போலீஸுக்கு குவியும் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பறக்க முடியாமல் தவித்த காக்கைக்கு உணவளித்த காவலரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பறக்க முடியாமல் தாவியபடி காக்கை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சந்திரன் அந்த காக்கைக்கு உணவும், தண்ணீரும் வைத்து பராமரித்துள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஊரடங்கு சமயத்தில் உணவின்றி தவிக்கும் பறவைகள், விலங்குகளுக்கு பொதுமக்கள்தான் உணவுகள் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பறக்க முடியாத காக்கைக்கு மனித நேயத்துடன் உணவளித்த காவலருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.