பெட்ரோல் பங்கில்... பெண் ஊழியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில்... ரகசிய கேமரா... 3 பேர் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெட்ரோல் பங்கில்... பெண் ஊழியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில்... ரகசிய கேமரா... 3 பேர் கைது!

கோவை சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூட்ஸ் கம்பெனியின் பெட்ரோல் பங்கில் ரத்தினபுரியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது மனைவியுடன் பணியாற்றி வந்துள்ளார். அதே பங்க்கில் பணியாற்றிய சுபாஷ் என்ற இளைஞர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்கள் உடைமாற்றும் அறையில், தனது மொபைல் ஃபோன் கேமராவை மறைத்து வைத்து, பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக படம் எடுத்துள்ளார்.

இதனைக் கவனித்த மணிகண்டனின் மனைவி, தனது கணவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் செல்ஃபோனை பறித்து அதில் பதிவாகி இருந்த பெண்களின் வீடியோவை அழித்துள்ளார். சம்பவம் தொடர்பாக, பெட்ரோல் பங்கில் பணியாற்றிய பெண்கள் யாரும், அப்போது புகார் கொடுக்க முன்வரவில்லை. இதனால் வழக்குப்பதிவு செய்யாமல், பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த சுபாஷை பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் வேலையை வீட்டு நீக்கி எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், பெட்ரோல் பங்கில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை பார்த்து அதிர்ச்சியடைந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரித்தனர். அப்போது, சுபாஷ்(30) எடுத்த வீடியோவை, பெண் ஊழியரின் கணவர் மணிகண்டன் முழுவதும் அழிக்காமல், தனது மொபைல் ஃபோனில் ஷேர் செய்து பாதுகாத்து வைத்திருந்துள்ளார். 

அதை தனியார் தொலைக்காட்சி நிருபர் மருதாச்சலத்துக்கு (42) அனுப்பியுள்ளார். மருதாச்சலம் பெண்களின் முகத்தை மறைக்காமல் அப்படியே சமூகவலைத்தளங்களில்  வெளியிட்டுள்ளார். இதையடுத்து 3 பேர் மீதும், பெண்களை மானபங்கம் படுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

COIMBATORE, EMPLOYEES, PETROL, BUNK