விமானத்தில் பயணித்த இளைஞருக்கு கொரோனா!.. சென்னை ரிட்டர்ன் ட்ரிப்!.. பதறவைக்கும் பின்னணி!.. கோவையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் பயணித்த இளைஞருக்கு கொரோனா!.. சென்னை ரிட்டர்ன் ட்ரிப்!.. பதறவைக்கும் பின்னணி!.. கோவையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை உள்நாட்டு விமான சேவை செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் 114 பயணிகள் கோவை வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 24 வயது இளைஞர் ஒருவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

அவருடன் பயணித்த 113 பயணிகளுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இளைஞர் கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர். சென்னை, திருவான்மியூரில் தங்கி, ஓர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோவை விமானநிலைய மருத்துவர் மூலம், 25-ம் தேதி மாலை சென்னை-கோவை பயணித்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்தோம். அந்தப் பயணி விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பயணி உட்பட விமானத்தில் பயணித்த அனைவருக்கும் மாஸ்க், கிளவுஸ், முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்கப்பட்டன. மேலும், அந்தப் பயணியின் அருகில் வேறு யாருக்கும் இருக்கை ஒதுக்கப்படவில்லை.

இதனால், வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு சற்று குறைவு. எங்களது அனைத்து விமானங்களுமே முறையாக, தரமாகப் பராமரிக்கப்பட்டுதான் இயக்கப்படுகின்றன. அந்த விமானத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த விமானத்தை இயக்கிய எங்களது குழுவினர் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல, மற்ற பயணிகளையும் கண்காணித்து, பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்துவோம்" என்று கூறியுள்ளனர்.

கொரோனா பாசிட்டிவான இளைஞருடன் பயணித்தவர்களுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாலும், அந்த விமானம் உடனடியாக சென்னைக்கு ரிட்டன் ட்ரிப் அடித்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு கோவை வந்த விமானம், மீண்டும் இரவு 8.40 மணி அளவில் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய இடைவெளியில் பயணிகளை ஏற்றுவதற்குதான் நேரம் இருந்திருக்கும். அதற்குள், விமானத்தை சுத்தப்படுத்துவது என்பது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.

எனவே, சென்னையிலிருந்து பயணித்த 113 பயணிகளுடன், கோவையிலிருந்து சென்ற பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

மற்ற செய்திகள்