'கோயம்புத்தூர்' ரோட்டுல படுத்து, குப்ப தொட்டி மிச்சம் மீதி சாப்பாட்டைச் சாப்பிட்டவன்'... 'ஆனா இன்னைக்கு பெரிய கோடீஸ்வரர்'... அதெல்லாம் மறக்க முடியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தலைப்பைப் பார்க்கும் போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. இப்படிக் கஷ்டப்பட்டவர் இன்று கனடாவில் பெரும் கோடீஸ்வரராக தனது உழைப்பால் உயர்ந்துள்ளார்.
இந்தியாவின் ஜவுளி நகரமான கோவையில், ரயில்வே டிராக் ஒட்டியிருந்த குடிசை பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் ஷாஸ் சாம்சன். அவரது தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. ஒரு நாள் சாம்சன் அவரது சகோதரர்களுடன் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் சாம்சனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்கள். இதனால் அவருக்கு எங்கே செல்வது என்றே தெரியவில்லை.
ரோட்டில் சுற்றித் திரிந்த சாம்சன், அங்கிருந்த ஹோட்டலுக்கு அருகே தினமும் அமர்ந்துள்ளார். அப்போது ஹோட்டல் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் மிச்சம் மீதி உணவு தான் சாம்சனின் வயிற்றுப் பசியைப் போக்கியுள்ளது. இரவு அங்கிருந்த சினிமா தியேட்டர் வாசலில் பலரும் படுத்துத் தூங்குவது வழக்கம். அதே போன்று தியேட்டர் வாசலில் சாம்சன் படுத்து துங்கியுள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் குழந்தை நல அதிகாரிகள் அவரை பார்த்து விசாரித்து, மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த ஒரு நாள் தான் அவரது வாழ்க்கையை அடியோடு மாற்றியது. காப்பகத்தில் 8 வயதாக இருந்த சாம்சனை, 1979ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த தம்பதியினர் தத்து எடுத்தனர். அதோடு சாம்சனை அவர்கள் கனடா அழைத்து சென்று அன்போடு கவனித்துக் கொண்டார்கள். சாம்சன் விருப்பப்பட்டதை போல அவரை நன்றாகப் படிக்க வைத்தார்கள்.
விவரம் தெரியாத வயதில் பசி என்ற ஒன்றோடு சாம்சன் அலைந்ததால், பெரிய சமையல் கலைஞன் ஆக வேண்டும் என்ற வெறி அவரது மனதில் இருந்துள்ளது . அதே போன்று சமையல் கலை பிரிவு எடுத்துப் படித்த சாம்சன், தனது கடின உழைப்பால் இன்று பெரிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவை அனைத்தும் ஷாஸ் சாம்சன் கனடா நாட்டில் உள்ள இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது சிறுவயது கஷ்டங்கள் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல அனுபவமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தனக்கு நேரத்தின் மீது அதீத நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். அன்று நான் ரோட்டில் சுற்றித்திரிந்த அந்த நேரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் பார்க்காவிட்டால், எனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது.
தற்போது என்னைப்போல் உள்ள, 22 குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். இதேபோல் சாம்சன் தம்பதியினர் எனக்கு உதவியதால் தான் என்னால் இப்போது மற்றவர்களுக்கு உதவ முடிகிறது. இவ்வாறு, நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஷாஸ் சாம்சன் நிச்சயம் ஒரு எனர்ஜி டானிக் தான்.
மற்ற செய்திகள்