'மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள்'...'எதற்கெல்லாம் அனுமதி'?... 'என்னென்ன தளர்வுகள்'... 28ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா அல்லது என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தொற்று பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தைக் கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்தகட்ட தளர்வுகள் என்ன, எதற்கு அனுமதி, எதற்குத் தடை என மக்கள் விவாதிக்கத் தொடங்கிவிடுகின்றனர். கடந்த முறை பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறை என்னென்ன தளர்வுகள் இருக்கும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் இந்த முறை எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்படும், எந்தெந்த துறைகளில் தளர்வு அறிவிக்கப்படும் என்பது குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. அத்துடன் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளும் வரவுள்ளதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் தி.நகருக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் புறநகர் மின்சார ரயில்களை இயக்கினால் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதனால் புறநகர் ரயில் சேவையும் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோன்று திரையரங்குகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பள்ளிகள் திறப்பு குறித்து உறுதியான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 28ம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிகிறது.
மற்ற செய்திகள்