"6 வருஷமா என்ன பிரச்சனைனு கூட தெர்ல".. அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி முதல்வருக்கு வச்ச கோரிக்கை.. அடுத்தநாளே அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அரியவகை முக சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு உதவும்படி முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஸ்ரீ வாரி பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டீபன் ராஜ் - சௌபாக்கியா தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் டானியாவுக்கு அரியவகை முக சிதைவு நோய் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதுபற்றி ஏதும் அறியாத பெற்றோர் மருத்துமனைக்கு தங்களது மகளை அழைத்துச் சென்று வந்திருக்கிறார்கள். ஆறு ஆண்டுகள் கழித்தே அவருக்கு முக சிதைவு நோய் இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கோரிக்கை
இந்நிலையில், இதுபற்றி பேசிய சிறுமியின் பெற்றோர்,"என்ன சிக்கல் என்பதே தெரியாமல் 6 ஆண்டுகள் மருத்துவமனைகளுக்கு அலைந்திருக்கிறோம். அரசு எங்களது மகளுக்கு மருத்துவ உதவி வழங்கிட வேண்டும்" என உருக்கத்துடன் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில் சிறுமியின் சிகிச்சைக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு சிறுமியின் வீட்டுக்கு நேரடியாக சென்றிருக்கின்றனர். சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் அறிந்துகொண்டனர்.
நேரில் சென்ற கலெக்டர்
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,"அரியவகை முக சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்துதரப்படும். அவருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை துவங்கும்" என உறுதி அளித்தார்.
அரியவகை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக உதவி கோரியிருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று சிறுமியின் சிகிச்சைக்கு உறுதி அளித்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
மற்ற செய்திகள்