'டிசம்பர் 31ந்தேதியுடன் முடியும் ஊரடங்கு'... 'புதுசாக பயமுறுத்தும் கொரோனா'... 'மருத்துவ குழுவுடன் ஆலோசனை'... என்ன முடிவுகள் வெளியாகும்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வரும் டிசம்பர் 31.ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், வரும் 28ந்தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

'டிசம்பர் 31ந்தேதியுடன் முடியும் ஊரடங்கு'... 'புதுசாக பயமுறுத்தும் கொரோனா'... 'மருத்துவ குழுவுடன் ஆலோசனை'... என்ன முடிவுகள் வெளியாகும்?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் பொது முடக்கத்திலேயே கடந்து விட்டது. தற்போது ஓரளவிற்குப் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க  கொரோனா வைரஸ்   பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

இது கொரோனா வைரசின் புதிய வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது ஏற்கனவே பரவி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. மத்திய அரசும் இங்கிலாந்துக்கான விமானச் சேவைக்குத் தடை விதித்துள்ளது. லண்டனிலிருந்து கடந்த 10 நாட்களுக்குள் சென்னை வந்துள்ள பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு வரும் டிசம்பர் 31.ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வரும் 28ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் வீரியமிக்க புதிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்குமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

வீரியமிக்க புதிய கொரோனா பரவி வருவதால் அதனைத் தடுப்பது குறித்து அரசு முக்கிய முடிவுகளை எடுக்கும் எனத் தெரிகிறது. மேலும் பொதுமக்களுக்கும் முக்கிய அறிவிப்புகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆரம்பிக்க உள்ள நிலையில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது, புதிய வருடத்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது போன்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்