‘அவரின் கனவு ஒருநாளும் பலிக்காது’!.. ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா..?’.. முதல்வர் பழனிசாமி சவால்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியாக சென்று முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று (18.03.2021) திருவாரூர் மாவட்டம் குடவாசலில் டிராக்டரில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டார். குடவாசல் எல்லையில் இருந்து பள்ளிவாசல் தெரு, கடைத்தெரு வழியாக பேருந்து நிலையம் வரை டிராக்டரில் பேரணியாக சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? முதல்வர் ஆகிவிடலாம் என்ற, ஸ்டாலினின் கனவு பலிக்காது. அதிமுக ஆட்சி தொடரவே மக்கள் விரும்புகின்றனர். ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்கத் ஸ்டாலின் தயாரா?’ என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தவர்களின் கனவு பலிக்கவில்லை. மு.க. ஸ்டாலின் மீது மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தன் அவர் உயிருடன் இருந்தவரை ஸ்டாலினுக்கு பதவி வழங்கவில்லை. ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறமை இல்லை. திமுகவிற்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்’ என பேசினார்.
மற்ற செய்திகள்