"நல்லா படிங்க.. ஒரு டிகிரி போதும்னு நெனைக்காதீங்க..கல்வி தான் நம்ம சொத்து".. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
மாநிலக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உயதநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதல்வர் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்னும் வகையில் தான் பெருமை கொள்வதாக தெரிவித்தார். அதனுடன் தனது கல்லூரி நாட்களை அவர் நினைவுகூர்ந்தார்.
தேர்வு
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின்," மிசா காலத்தில் சிறையில் இருந்த போது காவல்துறையினரின் பாதுகாப்போடு இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன். அறிவு, வளர்ச்சியை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநிலக் கல்லூரி திகழ்கிறது. கல்வியை கடல் என கூறுவார்கள் அந்த கடலுக்கு எதிரில் இருக்க கூடிய கல்லூரி மாநில கல்லூரி. நான் படித்த மாநில கல்லூரி நிகழ்சியில் பங்கேற்பதில் இருமாப்படைகிறேன். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் என்னும் அடிப்படையில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்" என்றார்.
ஒரு டிகிரி போதும்னு நினைக்காதீங்க
சமூக நீதியின் லட்சியமே அனைவரும் கல்வியும் வேலைவாய்ப்பையும் பெறுவதை உறுதி செய்வதுதான் எனப் பேசிய ஸ்டாலின்,"படியுங்கள். பட்டம் பெறுங்கள். ஒரு பட்டம் பெற்றால் போதும் என நினைக்காதீர்கள். பெண்கள் மிகுதியாக கல்வி பெற வேண்டும். பட்டம் பெற்ற பெண்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். யாராலும் திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்" என்றார்.
நன்றாக படிக்கும் மாணவிகள் திருமணத்திற்கு பிறகு, படிப்பை நிறுத்திவிடக்கூடாது என வலியுறுத்திய ஸ்டாலின், கல்வியை தாண்டி தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவற்றை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திட்டங்கள்
மாநில கல்லூரிக்கு சிறப்பு திட்டங்களையும் ஸ்டாலின் அறிவித்தார். அப்போது,"2,000 பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரியில் அமைக்கப்படும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை உதயநிதியும், தயாநிதியும் அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விடுதி அமைத்து தரப்படும்" என்றார்.
மற்ற செய்திகள்