Bharathiraja: வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜா.. முதல் வேலையாய் நேர்ல போய் நலம் விசாரித்த முதல்வர்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா குணமாகி நலமாக வீடு திரும்பியுள்ளார்.
கடந்த மாதம் இயக்குநர் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, முதலில் சென்னை தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அமைந்தகரையில் இருக்கும் பிரபல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாரதிராஜாவுக்கு நுரையீரலில் கொஞ்சம் பிரச்சனை இருந்ததை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த பாக்டீரியா கிருமியினால் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், அதற்கான சிகிச்சை வழங்கியதால், விரைவில் குணமாகிவிட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நுரையீரல் மருத்துவர் குழு, உடற்கூறு மருத்துவர் குழு, தீவிர சிகிச்சை மருத்துவர், இயன்முறை மருத்துவ குழு ஆகிய மருத்துவ குழுக்களால் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இது தொடர்பாக முதல்வர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி மு.க.ஸ்டாலின்,இன்று (10.9.2022) நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார்.
முன்னதாக இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து முதல்வரின் மனைவி, பாரதிராஜா மனைவியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். தற்போது பாரதிராஜா நலம் பெற்று இல்லம் திரும்பியதையடுத்து முதல்வர் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் ஆகியோர் இருந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்