‘அய்யா உங்களுக்காகதான் காத்திருக்கோம்’!.. மண்டப வாசலில் ‘மணக்கோலத்தில்’ நின்ற ஜோடி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணக்கோலத்தில் நின்ற ஜோடியை கண்டதும் காரை நிறுத்தி அவர்களை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சொந்த ஊரான திருவாரூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல்வராக பதிவியேற்ற பின் முதல் முறையாக சொந்த ஊருக்கு வருவதால், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருக்குவளையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு சென்று, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது திருவாரூர் அருகே பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டப வாசலில் மாவூரைச் சேர்ந்த மணமக்கள் சோப்ரா-ரமா ஆகியோர் முதல்வரைப் பார்ப்பதற்காக காத்திருந்தனர். மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார். அப்போது, ‘அய்யா உங்க தலைமையில்தான் எங்க திருமணம் நடைபெற வேண்டும் என காத்திருக்கிறோம்’ என மணமக்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே காரில் இருந்து இறங்கிய முதல்வர், திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி மணமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். இதனை அடுத்து மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து திருக்குவளைக்கு புறப்பட்டுச் சென்றார். மண்டப வாசலில் காத்திருந்த மணமக்களுக்கு முதல்வர் தலைமையில் திருமணம் நடந்ததால் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
மற்ற செய்திகள்