‘சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாம பாசிடீவ் ரிசல்ட்’.. ‘மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்’.. முதல்வர் அறிவுறுத்தல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நோய் அறிகுறி இல்லாமலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (06.04.2020) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்,‘தமிழநாட்டில் மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 22,049 கொரோனா படுக்கை வசிதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2500 வெண்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பை விரைவாக கண்டறியும் பரிசோதனை முறையான ரேபிட் டெஸ்ட் மூலம் அரை மணிநேரத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும். இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் 1 லட்சம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வரும் 9ம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்துவிடும், வருகிற 10ம் தேதி முதல் கொரோனா விரைவு பரிசோதனை தொடங்கப்படும்.
இதுவரை 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக சுமார் 95 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களை முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊரடங்கு நிறைவடைந்த பிறகு, கொரோனா தாக்கத்தை பொறுத்தே பள்ளித் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். டெல்லி சென்று திரும்பியவர்கள் குறித்த எண்ணிக்கை தோராயமானதுதான். அங்கு சென்று திரும்பியவர்களில் எஞ்சியோர் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நோய் என்பது இயற்கையாக வருவதுதான், அதற்கு சிகிச்சைதான் தீர்வு’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.