‘போட்டியிட வாய்ப்புப் பெறாதவர்கள் சோர்வடைய வேண்டாம்’!.. முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை ஒருமித்த ஆதரவோடு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இதில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் இன்று (04.03.2021) அதிமுக தலைமை நேர்காணல் நடத்தியது. மொத்தம் 7,967 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 9 பேர் கொண்ட குழு தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.
முதற்கட்டமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு வேட்பாளர் நேர்காணல் முடிந்த நிலையில், தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம். விருப்பமனு அளித்தவர்கள் தங்களை வேட்பாளர்களாக நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின் பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. அதனை முறியடித்து நான்காண்டுகளை கடந்துள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இருக்காது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மற்ற செய்திகள்