‘நீங்க நிருபர்.. என்ன இப்படி தவறா கேக்குறீங்க..?’.. ‘நான் கிராமத்துல இருந்து வந்தவன்’.. ஆவேசமான முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் முதல்வர் பழனிசாமி கோபமடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு என்றும், இந்தியாவிலேயே நீட் தேர்வை எதிர்த்து போராடும் மாநிலம் தமிழகம் தான் என்றும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான் 7.5% உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அப்போது நீட் தேர்வு குறித்து நிருபர் ஒருவர் முதல்வர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், ‘நீட்-ஐ கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில். அப்போது அவர்களுடன் திமுக கூட்டணியில் இருந்தது. அதை யாரும் கேட்காமல் எங்ககிட்ட நீட்... நீட்... நீட்-னு திருப்பித் திருப்பிக் கேட்குறீங்க’ என பதிலளித்தார். அதற்கு, ‘மத்திய அரசு அவர்களின் கல்வி நிறுவனத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 7.5% இட ஒதுக்கீடு கொடுத்ததைப் பெருமை பேசறீங்க’ என நிருபர் மீண்டும் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘பெருமை பேசறேன்னு தவறா பேசாதீங்க. நீங்க நிருபர், கேக்குற கேள்வியை சரியா கேளுங்க. 7.5% ஒதுக்கீடுனா என்னனு தெரியுமா? நீட் தேர்வு வர்றதுக்கு முன்னாடி எத்தனை பேர் அரசு பள்ளியிலிருந்து சேர்ந்தாங்கன்னு உங்களுக்கு கணக்கு தெரியுமா?’ என நிருபரிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த நிருபர், ‘10 சதவிகிதம் கூடுதலாக ஒதுக்கீடு வாங்கியிருக்க முடியும்..?’ என்று கேட்க முயன்றார். உடனே கோபமடைந்த முதல்வர், ‘சும்மா தேவையில்லாம கேள்வி கேட்காதீங்க. பெருமை பேசறோம்னு சொல்லாதீங்க. நான் கிராமத்துல இருந்து வந்தவன். நான் உண்மையாவே பெருமை கொள்கிறேன். ஏழை மாணவர்களுக்காக நாங்க கஷ்டப்பட்டிருக்கோம். என்ன கேள்வி கேக்கறீங்க. ஏழை மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க சார்’ எனக் கூறி அங்கிருந்து கிளம்பினார்.
மற்ற செய்திகள்