"நல்லா இருக்கும் குடும்பங்களை கெடுப்பது தான் கமல்ஹாசன் வேலை!".. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!.. கமல் ரிப்ளை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்"கமல்ஹாசன் தனது திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, "கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது" என்றார்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "லஞ்சம் ஊழலில் அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி" என்று கமல் தெரிவித்த கருத்து குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், "கமல் ரிட்டையர்ட் ஆகி அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதில் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படியிருக்கும்? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது? சொல்லுங்க பார்க்கலாம். கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக இல்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவர் வேலை. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள்.
எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்கு பயன்படும்படி எவ்வளவு பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா? அவருடைய படத்தை பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலி. அதனால் கமல் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்றார்.
முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். "முதல்வரும் பிக் பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கமல் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்