‘சோடா பாட்டில், உருட்டுக் கட்டையால்’... பொறியியல் மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்’...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 15 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

‘சோடா பாட்டில், உருட்டுக் கட்டையால்’... பொறியியல் மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்’...!

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன் நகர் பகுதியில், தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில வாரங்களாகவே மாணவர்களுக்குள் சீனியர்- ஜூனியர் மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று மாலை கல்லூரி நுழைவாயில் அருகே இரு தரப்பு மாணவர்களும் உருட்டுக்கட்டை, கல் மற்றும் சோடா பாட்டில்களைக் கொண்டு திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். இந்தத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, காயமடைந்த 15 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பிடித்து வந்து, காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லூரியில் படிக்கும் சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கும் கருத்து மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இறுதியாண்டு படித்துவரும் மாணவர்கள் விளையாடிய இடத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்சில், 3-ம் ஆண்டு ஜூனியர் மாணவர்கள் அமர்ந்து இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறியதாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், 3-ம் ஆண்டு மாணவர்கள் சிலர், மாணவிகளைக் கிண்டல் செய்ததாகவும், அதை இறுதியாண்டு மாணவர்கள் தட்டிக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, அப்பகுதியே பரபரப்பானது. “ரூட் தல” விவகாரத்தில் சென்னை கல்லூரி மாணவர்கள், பேருந்தில் பட்டாக்கத்திகளுடன் செய்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், திருச்சியில் அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ATTACK, TRICHY, STUDENTS