'சித்ராவின் இளகிய இதயத்தை சில்லு சில்லாய் நொறுக்கிய அந்த வார்த்தை!'... வாக்குமூலத்துக்கு பின் கைதான ஹேம்நாத்!.. சிறை நிர்வாகத்துக்கு ஆர்டிஓ எழுதிய கடிதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சித்ராவின் தற்கொலை விவகாரம் தமிழகத்தை உலுக்கியதை அடுத்து, சித்ராவின் பிரேத பரிசோதனையில் அவரின் தற்கொலை உறுதியானது.
எனினும் சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் சித்ராவின் தாயார், ஹேமந்த் என யாரோ கொடுத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் என பல தரப்பில் இருந்தும் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் சித்ராவின் கன்னத்தில் காயம் இருந்ததால், ஹேம்நாத் சித்ராவை அடித்துக் கொன்றுவிட்டதாக சித்ராவின் தாயார் கூறியதும், குளிக்கச் செல்லும்போது ஹேமந்த்தை சித்ரா வெளியே செல்லுமாறு கூறியதாக வெளியான தகவலும் ஹேம்நாத் மீது அனைவருக்கும் சந்தேகம் வர காரணமாக இருந்தது. தவிர சித்ராவின் சக நடிகைகள் ஹேம்நாத் மீதான தொடர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தனர்.
இன்னொரு புறம், வீடு, கார் என பணச்சுமையால் சிரமப்பட்ட சித்ராவினை, பொருளாதாரத்துக்காக ஹேம்நாத் நம்பி இருந்ததும், அவரை திருமணம் செய்யும் எண்ணத்தை கைவிட வலியுறுத்தி சித்ராவின் தாயார் விஜயா கூறியதும் சித்ராவின் உளைச்சலை அதிகமாக்கியிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வழக்கை நசரத் பேட்டை காவல்துறை ஒருபுறமும், ஆர்டிஓ ஒருபுறமும் விசாரித்து வந்தது. பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக வெளியான கூடுதல் தகவலும் இவ்வழக்கின் முக்கிய கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் தான், ஹேம்நாத் சித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் நடித்ததை வைத்து, அவர் நெருக்கமாக டான்ஸ் ஆடியதாகக் கூறி சந்தேகப்பட்டு ஹேம்நாத் சித்ராவை சித்ரவதை செய்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கார் ஏறும்போது எழுந்த வாக்குவாதம் நள்ளிரவில் இவர்கள் வந்து தங்கிய நசரத் பேட்டை நட்சத்திர விடுதி வரை நீடித்ததாகவும், அதில் ஹேம்நாத் சித்ராவை, “செத்துப் போ.. நீ வாழவேண்டிய அவசியமே இல்லை” என கூறியதாகவுமான திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
இந்நிலையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை நேற்று ஆர்டிஓ விசாரித்ததுடன், இன்றைய தினம் ஹேம்நாத்தை நேரில் அழைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் நசரத் பேட்டை காவல் துறையினர், ஹேம்நாத்தை சித்ராவின் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து சித்ராவின் தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்தை நாளை மறுநாள் காலை 11 மணிக்கு ஆஜர்படுத்தக்கோரி பொன்னேரி சிறைத்துறைக்கு ஆர்.டி.ஓ கடிதம் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில் வரும் வெள்ளி அன்று ஹேம்நாத் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.
மற்ற செய்திகள்