இட்லி முதல் இத்தாலி வரை... செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள்.. அடேங்கப்பா இவ்வளவு வகைகளா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கின்றன. இதில் வீரர்களுக்கு இந்தியா முதல் இத்தாலி, மெக்சிகன் என பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
44 வது செஸ் ஒலிம்பியாட்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. நேற்று மாமல்லபுரத்தில் துவங்கிய இந்த போட்டி ஆகஸ்டு 10 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் நிகழாத சாதனை இது. அதேபோல இந்திய அணி 6 அணிகளாக களமிறங்குகிறது. இந்த அணிகளில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரம்மாண்ட முறையில் நடைபெறும் இந்த போட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை துவங்கி வைத்தார்.
உணவுகள்
இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 த்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு அவர்களது நாட்டு உணவுகளையே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டிகள் மற்றும் சாஸ்கள் உள்பட 3500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பிரதான உணவு வகைகளாக 700 வகைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த உணவுகளில் இந்தியா, ஆசியா, ஐரோப்பிய உணவுகளும் இடம்பெற இருக்கின்றன. இந்நிலையில், இதற்காக இந்தியாவின் முன்னணி சமையற் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பிரபல சமையல் கலைஞரான ஜி.எஸ். தல்வார் இந்த ஏற்பாடுகளை பார்வையிடுகிறார்.
வித்தியாசமான உணவு
செஸ் ஓலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஒருநாள் ருசித்த உணவுகளை மீண்டும் உட்கொள்ளாத வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவுகள் தயாரிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த உணவு பட்டியலை தயார் செய்யவே 4 மாதங்கள் ஆனதாக கூறியுள்ளார் தல்வார். இதனிடையே நாள்தோறும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை பரிசோதனை செய்யும் பணியில் 256 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
மற்ற செய்திகள்