நண்பன் அனுப்பிய வீடியோவை பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போன சென்னை வாலிபர்.. நள்ளிரவு போலீஸிக்கு வந்த போன்கால்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈரோடு டிஎஸ்பிக்கு நள்ளிரவில் போன் செய்து நண்பன் உயிரை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பன் அனுப்பிய வீடியோவை பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போன சென்னை வாலிபர்.. நள்ளிரவு போலீஸிக்கு வந்த போன்கால்..!

சென்னை

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனது நண்பர் அஜித்குமார் என்பவர் ஈரோட்டில் வசித்து வருகிறார் எனக் கூறியுள்ளார்.  பின்னர் அவரது நண்பர் தூக்க மாத்திரை மாத்திரை சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள உள்ளதாக தனக்கு வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பிதாக கூறியுள்ளார்.

நண்பன் உயிருக்கு ஆபத்து

அதனால் தனது நண்பரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. உடனே அவரது உயிரை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித்குமாரின் செல்போன் எண்ணையும் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து உடனே அந்த எண்ணை டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தொடர்பு கொண்டுள்ளார்.

ஈரோடு எஸ்பி

ஆனால் அஜித்குமார் போனை எடுக்கவில்லை. இதனை அடுத்து ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து போன் இருக்கும் இடத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த செல்போன் நம்பர் ஆப்பக்கூடல் புன்னம் கிராமத்தை காண்பித்துள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர்

இதனை அடுத்து உடனடியாக ஆப்பக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அஜித்குமாரின் பெற்றோர் வீட்டின் முன் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை எழுப்பி விஷயத்து தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் அதிர்ச்சி

இதனைத் தொடர்ந்து வேகமாக போலீசாரும், இளைஞரின் பெற்றோரும் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அஜித்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசாரின் உதவியுடன் மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாருக்கு சரியான நேரத்தில் தகவல் தெரிவித்து நண்பரின் உயிரை இளைஞர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மற்ற செய்திகள்