'வாழ வேண்டிய பொண்ணு, அவளுக்கா இந்த கதி'... 'கதறி துடித்த தந்தை'... சென்னையில் நடந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண், திடீரென இறந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மறைமலைநகர், சாமியார் கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் சங்கீதாவிற்கு, கடந்த சில நாட்களாக தொண்டையில் வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து வலி அதிகமாக, தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், மகள் சங்கீதாவை சிகிச்சைக்காக கிருஷ்ணன் சேர்த்துள்ளார். அப்போது சங்கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள், தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து அரை மணி நேரத்தில் சங்கீதா ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து 21ம் தேதியும் சங்கீதா ரத்த வாந்தி எடுத்த நிலையில், திடீரென சுயநினைவையும் இழந்துள்ளார். இதனால் பயந்து போன கிருஷ்ணன், இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், அறுவை சிகிச்சையால் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம், நாங்கள் சரி செய்கிறோம் என கூறியதாக தெரிகிறது.
இந்தசூழ்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதாவை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி, கிருஷ்ணனிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கட்டாயபப்டுத்தியுள்ளார்கள். இதனால் தாம்பரம் காவல்நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் சரவணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் சங்கீதாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சங்கீதா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இளம் வயதில் மகள் இறந்த துயரம் தாங்காமல் சங்கீதாவின் தந்தை கிருஷ்ணன் கதறி அழுதார். தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்ட தவறான சிகிச்சையால்தான் தனது மகள் உயிரிழந்ததாகவும், அந்த ஆஸ்பத்திரி மற்றும் தனது மகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணன் மீண்டும் தாம்பரம் போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, அறுவை சிகிச்சையினபோது டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாக இளம்பெண் இறந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும். அதன்பிறகு உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.