'பேபி உன்ன மிஸ் பண்றேன்'...'செல்ஃபி அனுப்பு'... 'அலறிய இளம் பெண்'... சென்னை வாலிபர் செய்த அட்டகாசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முகநூலில் அடையாளம் தெரியாத நபருடன் பழக வேண்டாம் என, காவல்துறையினர் எவ்வளவோ எச்சரிக்கை செய்தும், இளம் பெண்கள் சிலர் வலுக்கட்டாயமாகச் சென்று சில கயவர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் இளம் பெண் ஒருவருக்கு நடந்த பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கு 20 வயது நிரம்பிய பெண் ஒருவர் உள்ளார். பட்டப்படிப்பை முடித்த அவர் மேற்கொண்டு எதுவும் படிக்காமல் வீட்டிலிருந்துள்ளார். அப்போது முகநூலில் அதிக நேரம் செலவிட்ட அந்த பெண்ணுக்கு கொடுங்கையூரைச் சேர்ந்த 22 வயதான நூரல் ஆசிம் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். முதலில் இருவரும் நண்பர்களாகப் பேசியுள்ளார்கள்.
இதையடுத்து அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேசி வந்த ஆசிம், அந்த பெண் குறித்து நன்கு அறிந்து கொண்டுள்ளார். நாட்கள் செல்ல செல்ல அந்த பெண்ணிடம் எதைப் பேசினால் உருகுவாள், எப்படிப் பேசினால் மயங்குவாள் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு தனது காதல் வலையை வீசியுள்ளார். ஒரு கட்டத்தில் நூரல் ஆசிமின் சொக்கவைக்கும் பேச்சு மற்றும் கேரிங்கான வார்த்தைகளை நம்பிய அந்த பெண்ணும் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். அதன் பிறகு இரவு பகலாக முகநூலில் தங்கள் காதலை இருவரும் வளர்த்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் உன்னைப் பார்க்க முடியாமல் என்னால் இருக்க முடியவில்லை, எனேவ போட்டோ அனுப்பு எனக் கூறி முகநூல் மூலம் பல போட்டோக்களை அனுப்ப வைத்துள்ளார். அப்போது அந்த பெண் தன்னை முழுவதுமாக நம்பி விட்டதை உறுதி செய்த ஆசிம், பின்னர் தனது வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளார். முகநூல் சாட்டில் ஆபாசமாகப் பேசத் தொடங்கிய அவர், அந்த பெண்ணை தனது பாலியல் வலையில் விழ வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், சுதாரித்துக் கொண்டு ஆசிம் உடனான காதலையும், முகநூல் நட்பையும் முறித்தார்.
அதன்பிறகு தனது ஆட்டத்தை ஆட தொடங்கிய ஆசிம், முகநூல் மூலம் அந்த பெண் அனுப்பிய புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிடுவேன் என்றும், இருவருக்கும் இடையிலான ரகசிய சாட்டிங்கை வெளியிடுவேன் என்றும் மிரட்டத் தொடங்கியுள்ளார். அப்போது தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், அதனால் தன்னை விட்டுவிடுமாறும் ஆசிமிடம் அந்த பெண் கெஞ்சியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என கூறிய ஆசிம் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்கப் பணம் தருமாறு கேட்டு மீண்டும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
விவகாரம் விபரீதமாவதை அறிந்த அந்த பெண், உடனடியாக இந்த பிரச்னையை தனது பெற்றோரிடம் கொண்டு சென்றுள்ளார். மகள் கூறியதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை திட்டிவிட்டு, ஆசிம் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், நூரல் ஆசிமை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முகநூலில் பெண்களை நட்பாக்கி, தனது பாலியல் வலையில் வீழ்த்துவதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதையும் தொழிலாக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நன்கு படித்த பெண்களே இப்படி தவறாகச் சென்று மாட்டிக்கொள்வது வேதனையளிப்பதாக காவல்துறையையினர் தெரிவித்துள்ளார்கள்.