‘தற்கொலைக்கு அழைத்த கணவர்!’.. மறுத்ததும், அடுத்தடுத்து ‘மனைவி’ கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி! - சென்னையை ‘உலுக்கிய’ கொடுந்துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளாவைச் சேர்ந்தவர் 58 வயதான சந்தோஷ் குமார். சென்னை ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி கோகுலம் காலனி அர்ஜுன் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்த இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு 45 வயதில் சுமதி என்ற மனைவியும் சிவகுமார் என்ற 10 வயது மகனும் சரண்குமார் என்கிற 8 வயது மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் என்பதால் சந்தோஷ்குமார் தவித்து வந்துள்ளார். இதனிடையே ஊரடங்கு காரணமாக தனது டீ கடையை மூடிவிட்டு கூலி வேலை செய்ய தொடங்கினார் சந்தோஷ்குமார்.
ஆனாலும் சந்தோஷ்குமார் குடும்பத்தை சரியாக நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் சந்தோஷ்குமாரிடம் உணவு பொருட்கள் கேட்டு பிள்ளைகள் அடம் பிடித்ததை அடுத்து மகன்களுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட சந்தோஷ்குமார் மனமுடைந்து அன்று மாலையே கடைக்கு சென்று எலி மருந்து வாங்கி வந்துள்ளார். அதனை தனது இரண்டு பிள்ளைகளுக்கும் அருகிலுள்ள ஏரிக் கரைக்கு அழைத்துச் சென்று கொடுத்துவிட்டு தானும் எலி மருந்தை உட்கொண்டுள்ளார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர் அவரது மனைவி சுமதிக்கும் மருந்து கொடுத்து குடிக்கும்படி கூறியுள்ளார். ஆனால் சுமதி அதை குடிக்க மறுத்துள்ளார். ஆனால் அடுத்த நொடியே கணவன் மற்றும் இரண்டு மகன்கள் அடுத்தடுத்து மயங்கி விழுவது கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி அலறியதும், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமார் இறந்துள்ளார். எனினும் இரண்டு சிறுவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்