"ஒரு உசுர காப்பாத்த 'தெய்வம்' மாதிரி ஆம்புலன்ஸ் டிரைவர் எல்லாம் போராடுறாங்க.. அவங்களுக்காக ஏதோ எங்களால முடிஞ்சது.." சென்னையை 'நெகிழ' வைத்த ரியல் 'ஹீரோஸ்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.

"ஒரு உசுர காப்பாத்த 'தெய்வம்' மாதிரி ஆம்புலன்ஸ் டிரைவர் எல்லாம் போராடுறாங்க.. அவங்களுக்காக ஏதோ எங்களால முடிஞ்சது.." சென்னையை 'நெகிழ' வைத்த ரியல் 'ஹீரோஸ்'!!

அதிலும் குறிப்பாக, இந்தியாவில் நாள் ஒன்றைக்கு, சுமார் 4 லட்சம் பேர் வரை, இந்த தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. மேலும், படுக்கை வசதிகளும் மருத்துவமனைகளில் குறைவாக உள்ள காரணத்தினால், மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலையும், பல இடங்களில் நிகழ்ந்து வருகிறது.

இதில், தமிழகத்திலும் பல அரசு மருத்துவமனைகளுக்கு முன், மணிக்கணக்கில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல், ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர். உரிய சிகிச்சை கிடைக்காத காரணத்தினால், இதன் மூலம் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதற்கிடையே, மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ் அதிகம் நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் யாரும் சரியான நேரத்தில் உணவருந்த முடிவதில்லை.

ஒருவரின் உயிரைக் காக்கும் தெய்வம் போல போராடுபவர்கள், உணவும், தூக்கமும் தொலைத்து கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் பசியினை போக்க எடுத்துள்ள அசத்தல் திட்டம் ஒன்று, அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

சென்னை 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளரான மாயா மணிகண்டன் என்பவர், பெருநகர சென்னை மாநகராட்சியைச் (Greater Chennai Corporation) சேர்ந்த அழகு பாண்டிய ராஜா என்ற அதிகாரியிடம் (City Innovation Officer), சென்னையின் அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கும் உணவு கிடைக்க வழி செய்யும் படி, கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தொடர்ந்து, 'Chennai Volunteers Task Force' என்னும் தன்னார்வ அமைப்பின் உதவியை அழகு நாடிய நிலையில், உடனடியாக, இதற்கு கை மேல் பலனும் கிடைத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த மகாதேவன் மற்றும் பாசில் ஆகியோர், சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளனர்.

அதன்படி, பல பேர் இந்த செயலுக்கு முன்வந்து பண உதவி செய்ய, மே மாதம் 25 ஆம் தேதி வரை, சென்னையின் அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கும் உணவு வழங்க நிதி திரட்டப்பட்டு, மகாதேவன் மற்றும் பாசில் ஆகியோர் உணவையும் இன்று முதல் வழங்க ஆரம்பித்துள்ளனர்.

ஒரு பக்கம் உயிரிழப்புகள் மற்றும் நோயாளிகளின் அவதி, மக்களை அதிகம் கலங்கடிக்கும் வேளையில், மறுபக்கம் முடிந்தவரை, அனைவரையும் காப்பாற்றப் போராடும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் நலனுக்காக, தன்னார்வ அமைப்பு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்